Wednesday, February 22, 2012

இளவரசு - பத்தாவது ஃபெயில்


"நான் என் கனவை அவனிடம் திணிப்பதாக இல்லை. அவன் அவனுக்குப் பிடித்ததைச் செய்யட்டும்."

கூலித் தொழிலாளிக்கும், பெற்றெடுத்த தெய்வத்திற்கும் வீடென்ற அரசவையில் நான் தான் இளவரசன். என்னைச் சான்றோனாக்க எண்ணியபோது, மெட்ரிகுலேசன் மோகத்தில் சமூகத்திற்கே பித்துப்பிடித்திருந்தது.

நன்கொடை, புத்தகம், சீருடை, கணிணி, கராத்தே, இந்தி - அதுபோக பருவமுறைக் கட்டணம், வாகனக் கட்டணம், கல்விமேம்பாட்டு வகுப்பு (டியூசன் ஃபீஸ்) கட்டணம் என்று விதவிதமாய், ரகரகமாய் வசூல்வேட்டையாடியதில் அல்லும் பகலும் உழைத்து, உழைத்ததையெல்லாம் அழுதார்கள்.உழைத்த களைப்பையும், உடல்கொண்ட வலியையும் - நான் பள்ளி செல்லும் அழகில் பார்த்துப்பார்த்துச் சிலிர்த்தே மறந்துபோய் நின்றார்கள்.

எட்டு வயதில் எனக்கு ஒரு மூட்டை புத்தகங்கள். மலையளவு பாடங்கள். மண்டையைப் பிய்த்துக்கொண்டேன். முட்டிமோதிப் பார்த்தேன். முற்றுமாய் ஏறவில்லை. மூன்று பாடங்களில் முதல்முறை 'ஃபெயில்'

அப்பா கையெழுத்தை போலியாய் போட்டபோது ஏமாற்றுவதாய் எண்ணவில்லை. மகிழ்ச்சியைக் கெடுத்துவிடக்கூடாது என்பது தான் - எனக்கு மனம் சொன்ன தர்மம். சங்கதி தெரிந்த போது நான் கதிகலங்கிப்போனேன் - அவர்கள் நிலைகுலைந்துபோனார்கள். கல்வி நிர்வாகம் கைகொட்டிச் சிரித்தது.

என்ன செய்ய... ஆங்கிலம் பேசினால் தூங்கிப்போய்விடுவேன். கணிதத்தைக் கண்டால் கண்ணைக்கட்டும். தமிழில் ஒற்றைக்கொம்பும், இரட்டைக்கொம்பும், காலும், ஒற்றும் எங்கெங்கே இடுவதென்று சரிவரத்தெரியாது. நானும் தமிழன் தான்.

ஆங்கிலம் அதைவிட. இஸ்ஸூம், வாஸூம், தி-யும், சகட்டுமேனிக்கு இடுவதைப்பார்த்து எள்ளிநகையாடி எல்லோரும் சிரிப்பார்கள். நானொன்றை நினைத்து எழுதினால் பொருள் வேறொன்றாக இருக்கும். பொறுமையிழந்தபோது போராடிக்கண்டுபிடித்தது தான் 'இளவரசு' ஆங்கிலம். ஆம். அது கிட்டத்தட்ட தமிழைப்போலவே இருக்கும். ஆங்கில மொழியை நான் கற்பதற்குப் பதில், ஆங்கிலம் என் மொழியைக் கற்றுக்கொண்டிருந்தது. இதைக்கேட்டும் இந்த உலகம் வயிறுவலிக்கச் சிரித்தது. நாலுபேரைச் சிரிக்கவைக்கவாவது நம் கண்டுபிடிப்பு உதவியதே என்று அசிங்கப்பட்டதெற்கெல்லாம் சமாதானம் சொல்லிக்கொள்வேன். ஆங்கிலத்திற்கே இந்த கதியென்றால்.... இந்தி-யில் நான் எப்பேர்ப்பட்ட ஜெகஜாலக்கில்லாடி என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமா...


எல்லையில் தேர்ச்சிபெற்றே ஏழாம்வகுப்பு சென்றுவிட்டேன். கனவு பலிக்காத பெற்றவர்கள், கௌரவத்திற்காக படிக்கச்சொன்னார்கள். ஊரெல்லாம் பையன் மெட்ரிகுலேசன் என்று பெருமை பீத்திக்கொள்வார்கள். இங்கெனக்கு மண்டையிலேயே ஏறாது.

அடிவாங்கி அடிவாங்கி மறத்துப்போனது. அசிங்கப்பட்டு அசிங்கப்பட்டு வெறுத்துப்போனது. இரண்டாம் பருவத்தேர்வு தேர்வுத்தாள் வநியோகிக்கும் நாளில் முதல் முறையாக வகுப்புக்கு டேக்கா... எங்கே போவதென்று தெரியாமல் திரையரங்கம் போனேன். வீட்டுக்கு சங்கதி தெரிந்துபோனது. நான்கு நாட்களாய் வீட்டுக்கே போகாமல் ஊரூராய்ச் சுற்றினேன். காசு கரைந்து போனபின், பசி பொறுக்காமல் மயங்கிவிழுந்த என்னை கண்டேடுத்து வீட்டில் சேர்த்தார்கள். அப்படியே செத்திருந்தால் நிம்மதியாய் போயிருக்கும்.

நான் பத்தாவது போனபோது எதிர்வீட்டுக்குக் குடிவந்த எட்டாம் வகுப்பு மேகலா எல்லாவற்றையும் பார்த்து கண்கலங்கிப் போனாள். நீ ஏன் தினம் அடிவாங்குறே...என்று அவள் வருத்தத்தோடு கேட்டபோது தான் என்னுள் என்னென்னவோ செய்தது. அதற்குப் பின்னும் அடிவாங்கினேன். ஆனால், ஒரு சிறு திருத்தம். எவ்வளவு அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பேன்.

அவளுக்கு சதுரங்கம் விளையாடப் பிடிக்குமென்று தெரிந்து நண்பர்களிடம் வேண்டிவிரும்பிக் கற்றுக்கொண்டேன். அங்கங்கே சென்று போட்டிகளில் பங்கேற்றதில் ஒன்றிரண்டில் வென்றும் காட்டினேன். அப்போதுதான் உள்ளுக்குள் சிறு நம்பிக்கை பிறந்தது. எங்கே எப்படி வென்றாலும் அவளிடம் மட்டும் விரும்பி விரும்பி தோற்பேன். 'இதுகூடத் தெரியல. மக்கு' - என்று அவள் என் உச்சந்தலையில் கொட்டு வைத்தால் - என் மண்டையிலிருந்து இளையராஜா இசையமைப்பார்.

ஆர்வக்கோளாரில் விஸ்வநாதன் ஆனந்த் படத்தைவாங்கி வீட்டில் மாட்டிவைத்தேன். 'வெட்டிவேலை - படிச்சு மார்க் வாங்கப்பார்' என்று அதற்கும் திட்டு தான் விழுந்தது. இப்படி இருக்க... ஒரு நாள் 'நான் டியூசன் போகனும் சேர்த்துவிடுங்க' - என்று தப்பித்தவறிச் சொல்லிவிட்டேன். 'அட... நம்ம பயலுக்கும் புத்திவந்திருச்சு' என்று வியப்பிற்குள்ளானவர்கள் ஆசை ஆசையாய் அதற்கும் வழிசெய்தார்கள். நானோ மேகலா போகிறாள் என்று மோகத்தில் சென்று சேர்ந்தேன்.

இயற்பியலையும், வேதியியலையும், கணிதத்தையும் தாண்டி, மேகலாவும், அவளுக்குப் படித்த சதுரங்கமும் தான் நினைவெல்லாம் வந்துபோனது. சென்ற ஒரு வாரத்தில் அங்கேயும் அசிங்கம். இங்கேயும் அதே சூத்திரம் தான். எவ்வளவு அசிங்கப்பட்டாலும் சிரித்துக்கொண்டேயிருப்பது. ஒரு அளவிற்கு மேல் மேகலாவுக்கு முன்னால் முடியவில்லை. 'டியூசன் பிடிக்கலை. நின்னுக்கிறேன்' - என்றேன். இடுப்புவாராலேயே முதுகெலும்பை ஒடித்தார்கள்.

இப்படியே போன பத்தாம் வகுப்பில் நினைத்ததைப் போலவே ஃபெயில். மேகலா கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லாமல் தவித்த போது நண்பனென்ற பெயரில் சாத்தானின் தூதுவனைப் பார்த்தேன். 'மச்சி. புண்பட்ட நெஞ்ச புகையவிட்டு ஆத்துடா' என்றான். முதல் முறையாக தண்ணியடித்துவிட்டு நடுவீதியில் நாள்கணக்கில் மயங்கி உருண்டேன். ஆளரவம் தெரியாமல் தேடித்திரிந்தவர்கள் ஈமொய்க்கக்கிடந்த என்னை கொண்டுவந்து குளிப்பாட்டினார்கள். குடும்பத்தின் ஒட்டுமொத்த மானமும் ஊரறிய கப்பலேறியது.

கொஞ்ச நாள் யாரிடமும், எதுவும் பேசவில்லை. பார்க்கிறவர்களில் பாதி பேர் நீ தானே குடித்துவிட்டு நடுவீதியில் விழுந்து கிடந்தவன் என்பார்கள். சிலர் ஓ... நீ பத்தாம் வகுப்பு ஃபெயிலா என்பார்கள். அம்மா கண்ணீர் விடுவாள். அப்பா பேசுவதே இல்லை. நாட்களை நான்கு சுவற்றுக்குள்ளேயே கடத்திக்கொண்டிருந்தேன்.

சரஸ்வதி பூசனைக்கான நாள் வந்தது. படித்துத் தோற்ற புத்தகங்களை அம்மா கேட்ட போது அடுக்கிவைக்கக் கொடுத்தேன். என்ன தோன்றியதோ என் சதுரங்கப் பலகை அட்டையையும் அதோடு சேர்த்தே வைத்தேன். பூசனை முடிந்த மறுநாள் புத்தகங்களை அப்படியே விட்டுவிட்டு,என் சதுரங்க அட்டையை மட்டும் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு அந்தப்புத்தகங்கள் என்ன ஆயின என்பது கூட எனக்கு இன்று வரை தெரியாது.

நாளைக் கடத்த வழியில்லாமல் மறுபடியும் சதுரங்கச் சங்களுக்கு சென்று வந்தேன். நிறைய தோல்விகள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக சதுரங்கத்தின் சூத்திரங்களைக் கற்றுத்தேர்ந்தேன். முதல் சுற்று, இரண்டாம் சுற்று தாண்டி மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டேன். அதன் வெற்றிகளுக்குப் பரிசாகக் கிடைத்த தொகையில் வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது. கொஞ்சம், கொஞ்சம் நாளிதழ்களிலும் என் பெயர் அவ்வப்போது அடிபடும்.

முதல்தடவை நாளிதழில் பெயரைப்பார்த்த போது அம்மாவுக்கு அளப்பறிய மகிழ்ச்சி. அப்பா அப்படியேதான் இருந்தார். பத்தாம் வகுப்பில் கோட்டைவிட்டு அவரின் கனவை நிறைவுசெய்யமுடியாத மகனாகிப்போனேன்.

ஒரு நாள் வழியில் மேகலாவைப் பார்த்தேன். யாரோ ஒரு வாலிபரோடு பேசிக்கொண்டிருந்தாள். நான் ஒதுங்கிப்போய்விட்டேன். ஒரு பல்பொருள் அங்காடியில் விற்பனை மேற்பார்வையாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அந்த வேலை தான் கிடைக்கும். ஏதோ... குறைந்தத ஊதியம் தான். ஆனால் மன நிறைவோடு செய்கிறேன். அதற்குமேல் முயற்சியே செய்யவில்லை.

முகம் நிறைய தாடி. தோற்றத்தில் பைத்தியக்காரனைப் போலத்தான் இருந்தேன். ஒரு நாள் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, கம்பியைப் பிடித்திருந்த என் கைகளை ஒரு பெண்ணின் கரங்கள் பற்றிக்கொண்டிருந்தன. திரும்பிப்பார்த்த போது அதிர்ந்து போனேன். மேகலா.... இப்போது எம்.பி.ஏ. இறங்கி ஒரு மரத்தடியில் நிழலில் நின்றவாறே பேசத்துவங்கினோம்.

'மறந்தேபோய்ட்டேல்ல...' அவள் கேட்க...

'இறந்தேபோய்ட்டேன்...' - நான் சொன்னேன்.

'நீ இப்ப பெரிய ஆள் ஆகிட்ட. நாளிதழ்ல உன் பேர் வருது. உன் மேல் நல்லபிப்பராயம் இல்லாமல் தானா உன் பெயர் வந்த அத்தனை நாளிதழ்களையும் சேகரித்து வைத்திருப்பேன்.' என்று சொன்னாள்.

'எனக்கு எல்லாவற்றையும் தந்துவிட்டு நீ மட்டும் போய்விட்டாய்' என்று சொன்னேன்.

எல்லாம் பேசி முடித்துவிட்டு,'நல்லா யோசிச்சுக்கோ மேகலா... கல்யாண பத்திரிகைல மேகலா எம்.பி.ஏ.ன்னு போட்ருக்க இடத்தில இளவரசு பத்தாவது ஃபெயல்னு போட்டிருந்தா நல்லாவா இருக்கும்... சேச்சே... வேண்டாம்' என்று சொன்னேன். ஏறஇறங்கப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ... அப்படியே கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டாள். பிறகு திருமணம் செய்து கொள்ள நாங்கள் பல சாகசங்களை மேற்கொள்ள நேர்ந்தது.

சின்ன இளவரசன். ஆம். மகன். இரண்டு வயது. இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை. மேகலாவும், நானுமே அவனுக்கான அடிப்படை கல்வியறிவை வளர்ப்பதாக இருக்கிறோம். அவனுக்கு எது பிடிக்கும் என்று இதுவரை பிடிபடவில்லை. சில சமயங்களில் கிரிக்கெட் மட்டையால் பந்துகளை விளாசுகிறான். அவனிடம் ஒன்று மட்டும் கவனிக்க முடிந்தது. பந்து கையில் கிடைத்தால் குறி தவறாமல் அடித்துவிடுவான். விட்டின் கண்ணாடி, பல்பு, என் மண்டை என்று அவன் எரிந்த பந்துக்கு விருந்தாகி வீரத்தழும்புகள் பெற்றவர்கள் ஏராளம். யார் கண்டார்... வருங்காலத்தில் துப்பாக்கி சுடுதலில் சாதனையாளன் ஆனாலும் வியப்பதற்கில்லை. அப்பா அப்படியே தான் இருக்கிறார். அவனை இப்போதே மழலையர் பள்ளியில் சேர்க்க வேண்டுமாம். அப்பாவிடம் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். 'நான் என் கனவை அவனிடம் திணிப்பதாக இல்லை. அவன் அவனுக்குப் பிடித்ததைச் செய்யட்டும். அவன் இளவரசு அல்ல. என் மகன்.'
-தமிழ் வசந்தன்